அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். தொடர்ந்து நாளை மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் பிரதிஷ்டை நிகழ்வு, 1 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில் பிரதிஷ்டையை முன்னிட்டு பல மாநிலங்களில் விடுமுறை அளித்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் நாளை சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதற்கு பாஜகவை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு கோயில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைக்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. அப்படியான எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை என இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் கொடுத்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பொது இடங்களில் ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியை நேரலை செய்ய அனுமதியில்லை என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.