விபத்தில் சிக்கிய இல்லத்தரசிக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்கும் போது, ஒரு இல்லத்தரசியின் வருமானத்தை மாதச் சம்பளமாகவோ அல்லது ஊதியமாகவோக் கணக்கிட முடியாது என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு பேருந்துக்காக காத்திருந்த போது, கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் ஓட்டி வந்த கார் மோதியதில் படுகாயமடைந்ததாகவும், இதனால், தனக்கு 50% அளவிற்கு ஊனம் ஏற்பட்டதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து, விபத்தில் படுகாயமடைந்த இந்த பெண்ணுக்கு மாதம் 5,000 இழப்பீடு வழங்கவேண்டும் என்று விபத்தை ஏற்படுத்தியவருக்கு வாகன விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயம் (எம்ஏசிடி) உத்தரவிட்டது. இந்த இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி அந்த பெண் கொல்கத்த உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள், மனைவி/தாய் குடும்பத்திற்குச் செய்த சேவைகளுக்குப் பதிலாக எந்தத் தொகையையும் கணக்கிட முடியாது என்றும் கணவனை சார்ந்திருப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, இல்லத்தரசி/தாயின் சேவைகள் குறித்து சில பணமதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும். அந்த சூழலில், `சேவைகள்’ என்ற சொல்லுக்கு ஒரு பரந்த பொருள் கொடுக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
மேலும், இல்லத்தரசியின் வருமானத்தை மாதச் சம்பளமாகவோ அல்லது ஊதியமாகவோ கணக்கிட முடியாது என்று கூறிய நீதிமன்றம், பெண்ணுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை மாதம் 5600 ரூபாயாக உயர்த்தியது மட்டுமல்லாமல், மன வேதனையின் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டை 50,000 ரூபாயாக உயர்த்திதீர்ப்பளித்தது.