அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தியது. மேலும், 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என ஊழியர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். கொரோனா காரணமாக கடந்த 2020 முதல் 2021 ஜூன் வரை 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் அரசு ஊழியர்களுக்கு செலுத்தப்படவில்லை.
இன்னும் நிலுவைத் தொகை பற்றி அரசு முடிவு எடுக்காமல் இருந்து வருகிறது. மேலும், இதுகுறித்து கேபினட் கூட்டத்தில் ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை செலுத்தப்படும் போது 3ஆம் நிலை ஊழியர்களுக்கு 11,880 ரூபாய் முதல் 37 ஆயிரத்து 554 ரூபாய் வரை நிலுவைத் தொகை கிடைக்கும். இதனையடுத்து 13-ஆம் நிலை அல்லது 14-ஆம் நிலை ஊழியர்களுக்கு ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபாய் முதல் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் வரை அகவிலைப்படி கிடைக்கும். இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைத்தால் 55 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள்.