காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி ஏராளமான விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிற்கு முறைப்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்கவில்லை. இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே, டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பேசிய தலைவர் எஸ்.கே.ஹல்தார், ‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய (தினமும் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி) நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதற்கிடையில், காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை (இன்று) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 6,998 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5,268 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்த நிலையில், தற்போது தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 11,998 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இது அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி வருகிறது.