மேட்டூர் அணையில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுவதால், காவிரி கரையோரத்தில் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடி உள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 10 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்தது.
இந்த அளவு நண்பகல் 12 மணிக்கு 1.10 லட்சம் கன அடி ஆகவும், மாலையில் 1.25 லட்சம் கன அடியாகவும் அதிகரித்தது. இரவு 7 மணி அளவில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து ஒரு லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாகவும் இரவு 10 மணிக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது. நள்ளிரவு 12 மணிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தற்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,70,000 கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக 21,500 கன அடி தண்ணீரும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 48,500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 1,70,000 கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில்
வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.