கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேலாக வீடுகளுக்குள் முடங்கி தவித்த மக்கள் தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கடந்த சில மாதங்களாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 500க்கும் கீழாக பதிவாகி வந்தது. ஆனால், இந்த பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தை கடந்து சென்றுள்ளது. இதையடுத்து, மத்திய-மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு மூன்று தினங்களாக குறைய தொடங்கியது. நேற்று முன் தினம் 7 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு இன்று 12,591 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஏப்ரல் 3-வது வாரத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் இருந்தது கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுபோல, தமிழ்நாடு உள்ளிட்ட கொரோனா பரவல் அதிகம் உள்ள 8 மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.