காஷ்மீர் சென்ற சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக 4 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. பைசரன் எனப்படும் பிரபலமான புல்வெளியில் இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், அங்கு சுற்றுலா வந்திருந்தவர்களே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். 13-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் இதில் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல், சம்பவம் காஷ்மீர் பகுதியில் நடந்த மிகப் பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் அவர்களின் நோக்கங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைக் கண்டறிய பாதுகாப்புப் படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில் தான், காஷ்மீர் சென்ற சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக ஸ்ரீநகரில் இருந்து டெல்லி, மும்பைக்கு 4 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன. தீவிரவாத தாக்குதல் சம்பத்தை அடுத்து ஜம்மு – காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஒரேநேரத்தில் திரும்புவதால், ஸ்ரீநகரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஸ்ரீநகருக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.