CSK VS MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் எம்எஸ் தோனி, தனது மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 7 மணிக்கு நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும்- Rickelton-ம் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே 4 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து, Rickelton 13, வில் ஜாக்ஸ் 11 ரன்களில் அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ், சற்று நிதானமாக ஆடியநிலையில், நூர் அகமது சுழலில் ஸ்டம்பிங்க முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சூர்யாகுமார் யாதவின் விக்கெட் போட்டியில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி சூர்யகுமார் யாதவை 0.12 நொடிகளில் ஸ்டம்பிங் செய்து அதிரவிட்டார். சூர்யகுமார் சற்று தடுமாறிய வினாடியில் மஹியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் சிக்கி அவுட்டானார். 43 வயதானாலும் “Lion is alway Lion” என்பதை போல் தோனியின் ஸ்டம்பிங் இருந்தது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
மும்பை அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது மூன்று விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ரச்சின் ரவீந்திரா – ராகுல் திரிபாட்டி ஆகியோர் களமிறங்கினர். 2 ரன்களில் ராகுல் திரிப்பாட்டி அவுட்டாக, பின்னர் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திராவுடன் ஜோடி சேர்ந்த தொடக்கத்திலேயே அதிரடியாக அடித்து ஆடினார். இதன்மூலம் 26 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார் ருதுராஜ். இதையடுத்து சிவம் துபே 9, தீபக் ஹூடா 3, சாம் கர்ரன் 4, ஜடேஜா 17 ரன்கள் என்ற சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
ஒருபுறம் நிலைத்துக்கொண்டு அதிரடி காட்டி வந்த ரச்சின் ரவீந்திரா, கடைசிவரை அவுட்டாகாமல் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால், 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 158 ரன்கள் எடுத்து முதல் போட்டியிலேயே வெற்றிவாகை சூடியது. மும்பை அணி சார்பில் அதிகபட்சமாக விக்னேஷ் புத்தூர் என்ற 23 வயது இளைஞர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேரளாவை சேர்ந்த விக்னேஷ் புத்தூரை ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.