IND vs BAN T20: இன்று (அக்டோபர் 6) குவாலியரில் உள்ள மாதவ்ராவ் சிந்தியா மைதானத்தில் இந்தியா-வங்கதேசம் தொடரின் முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு போட்டிகளிலும் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்று அசத்தியது.
இந்தநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்து ஷிவம் துபே திடீரென விலகியுள்ளார். பிசிசிஐ எக்ஸ் தள பதிவில், “ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். மூத்த தேர்வுக் குழு ஷிவம் துபேவுக்குப் பதிலாக திலக் வர்மாவை நியமித்துள்ளது. ஞாயிறு காலை குவாலியரில் திலக் இந்திய அணியுடன் இணைவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் திலக் வர்மா இந்திய அணிக்கு நல்ல பங்களிப்பு வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல்லில் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.