சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார் மாரிமுத்து. இவர் இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்தார். ஏய் இந்தாம்மா என அதட்டலாக பேசும் வசனம் பட்டித்தொட்டியெங்கும் வைரலானது.
இந்நிலையில், நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு வியர்த்துள்ளது. இதனால், வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே வந்த மாரிமுத்து, அவரே காரை ஓட்டிக் கொண்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கும்போதே அவரது உயிர்பிரிந்துள்ளது.
இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாரிமுத்துவின் உடல் தகனம் செய்யப்படுவதற்காக சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே பசுமலைத் தேரி என்னும் இடத்தில் சற்றுமுன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.