fbpx

முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!… அதிக வெற்றி!… 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்!

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. மேலும், இந்த வெற்றியின் மூலம் அதிக வெற்றிபெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகக்கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டி நேற்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே சுப்மன் கில் 9 ரன்னில் விக்கெட்டைஇழந்தார். அடுத்து வந்த கோலி ஒன்பது பந்து விளையாடி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 40 ரன்னிற்கு மூன்று விக்கெட்டை இழந்து தடுமாறியது.

பின்னர் கேப்டன் ரோஹித் மற்றும் கே.எல் ராகுல் இருவரும் கூட்டணி அமைத்து சிறப்பாக விளையாடி அணியின் ரன்ரேட் எண்ணிக்கை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய கே.எல் ராகுல் 39 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் சூரியகுமார் யாதவ் களமிறங்க மறுபுறம் அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா 101 பந்திற்கு 87 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதில் 10 பவுண்டரி 3 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 49 ரன்களில் விக்கெட் இழந்தார். இருப்பினும் அடுத்து வந்த ஜடேஜா எட்டு ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இந்திய அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட்டை இழந்து 229 ரன்கள் எடுத்தது.

இதனைதொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்கமுடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறினர். இறுதியாக இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்களில் அனைத்து விக்கெட்டை இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள், பும்ரா 3 விக்கெட்டுகள், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று, 5 போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டு புள்ளியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மேலும், இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் இந்திய அணி தனது 59வது வெற்றியை பதிவு செய்தது. அதாவது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் அதிக வெற்றிபெற்ற அணிகள் வரிசையில் நியூசிலாந்து(58) அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி 73 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

ஆந்திரா ரயில் விபத்து!... தனித்தனியே நிவாரணம் அறிவித்த பிரதமர், ரயில்வே அமைச்சகம், ஆந்திர முதல்வர்!

Mon Oct 30 , 2023
ஆந்திராவில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சகம், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் தனித்தனியாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் […]

You May Like