உலகளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகப் பட்டினி குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
ஊட்டச்சத்து குறைபாடு, சைல்டு ஸ்டண்டிங், குழந்தைகள் மரணம், சைல்டு வேஸ்டிங் ஆகியவை உலக பட்டினிக் குறியீடு பட்டியலை தயார் செய்ய அடிப்படையாக பின்பற்றப்படும் காரணிகளாக உள்ளன. ஊட்டச்சத்து என்பது உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைக்காமல் இருப்பதை வைத்து கணக்கிடப்படும்.
சைல்டு ஸ்டேண்டிங் என்பது குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற உயரம் என்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். சைல்டு வேஸ்டிங் என்பது 5-வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் வயதுக்கு ஏற்ற உடல் எடை மற்றும் உயரம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை வைத்து கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில், மொத்தம் 122 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதில், கடந்தண்டு 107-வது இடம் பிடித்திருந்த இந்தியா, நடப்பாண்டு 111-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் இந்தியாவில் தான் சைல்டு வேஸ்டிங் அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது 18.7 சதவீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளாவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளாகவும் உள்ள பாகிஸ்தான் 102-வது இடத்திலும் வங்காளதேசம் 81-வது இடத்திலும், நேபாளம் 69-வது இடத்திலும், இலங்கை 60-வது இடத்திலும் உள்ளது.
கடந்தாண்டும் உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இந்தியாதான் இந்த நாடுகளை விட பின் தங்கியிருந்தது. கடந்தாண்டு பாகிஸ்தான (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81) ஆகிய இடத்தில் இருந்தன. தெற்கு ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா சவுத் ஆப் தி சஹாரா ஆகிய பிராந்தியங்கள்தான் உலகின் அதிக பட்டினி அளவை கொண்ட நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.