இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ்-டிராவிஸ் ஹெட் ஜோடி தொடக்கம் அளித்தது. தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டிராவிஸ் ஹெட் 33 ரன் சேர்த்திருந்த போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 49 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 270 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி தொடக்கம் அளித்தது. அதிரடியாக பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 17 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலி சுப்மன் கில்லுடன் இணைந்தார். ஆஸ்திரேலிய அணியினரின் நேர்த்தியான பந்துவீச்சில் ரன் சேர்க்க சிரமப்பட்ட இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். சுப்மன் கில் 37, விராட் கோலி 54, பாண்டியா 40, சூர்ய குமார் யாதவ் 0 என ஆட்டமிழக்க ரசிகர்களின் நம்பிக்கையும் தகர்ந்தது. இந்த தொடரில் நடந்த 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்-அவுட்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
49.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் நம்பர்-1 இடத்தை பிடித்தது.