2024ஆம் வருடத்திற்கான இந்திய அணியின் முதல் டி20 போட்டி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி இன்று நடந்த முதல் டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி 50 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டை எடுக்க முடியாமல் 7 ஓவர் வரை இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 28 ரன்களை எடுத்திருந்த போது அக்ஷர் படேல் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து, சிவம் துபே வீசிய பந்தில் இப்ராஹிம் சத்ரான் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஓமர்சாய் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய நபி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா ரன் எடுக்க ஓடிய போது மறுபுறம் நின்றுகொண்டிருந்த சுப்மன் கில் நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தாதல் ரன்கள் எதுவுமின்றி விக்கெட்டை பறிகொடுத்தார். 14 மாதங்களுக்கு பிறகு சர்வதேச் டி20 போட்டியில் களமிறங்கியா அவருக்கு இந்த போட்டியில் ஏமாற்றமே கிடைத்தது. பின்னர் சுப்மன் கில் 23 ரன்களுக்கும், திலக் வர்மா 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் அதிரடியாக விளையாடிய சிவம் துபே மளமளவென ரன்களை குவித்து தள்ளினார். மேலும் ஜிதேஷ் ஷர்மா 31 ரன்களுடன் ஆட்டமிழந்தார்
இறுதி வரை களத்தில் இருந்த சிவம் துபே 40 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். மேலும் ரிங்கு சிங் 9 பந்துகளில் 16 ரங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 17.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எளிதில் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.