இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு முதன்முறையாக பெண் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது இந்திய விமானப்படை வரலாற்றில் முதன்முறையாகும்.
இந்திய விமானப்படையில் உள்ள போர் பிரிவில் இதுவரை எந்த ஒரு பெண்ணும் தலைமை பொறுப்பில் நியமனம் செய்யப்படாத நிலையில் அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் வகையில் முதல் முறையாக இந்திய விமானப்படையின் போர் பிரிவில் ஷாலிசா தாமி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்திய விமானப்படையில் வின் கமாண்டர் பொறுப்பில் இருந்த அவர், உலக மகளிர் தினமான நாளை முதல் இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்க்கும் வகையில் போர் பிரிவுக்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விமானப்படையின் மேற்கத்திய செக்டாரின் போர் பிரிவின் தலைமை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷாலிசா தாமி முதல்முறையாக அதிகாரிகளை கட்டளையிடும் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2019 இல் ஷாலிசா தாமி விமானத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் IAF அதிகாரி என்ற பெருமையை பெற்றார். பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த ஷாலிசா தாமியின் முதல் தனி விமானம் 2003 இல் HAL HPT-32 தீபக்கில் இருந்தது. 2003 இல் IAF இல் பறக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, ஷாலிசா தாமி பின்னர் 2005 இல் விமான லெப்டினன்ட்டாகவும், 2009 இல் படைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.
ஹெலிகாப்டர் பைலட்டாக பணி செய்த ஷாலிசா தாமி 2800 மணி நேரம் போர்படை விமானத்தில் பறந்த அனுபவம் உள்ளவர் என்பதும் ஒரு தகுதி வாய்ந்த நபர் தான் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவருடைய நியமனம், ராணுவத்தில் உள்ள ஒரு கர்னலுக்கு சமமானது என்றும் கூறப்படுகிறது. இரண்டு முறை விமானப்படை தளபதியால் பாராட்டப்பட்டுள்ள இவர் தற்போது போர் பிரிவின் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.