உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. டாப் 10 லிஸ்டில் இந்திய விமான நிலையமும் இடம்பிடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
விமான நிலையத் தரங்களை அளவிடும் மற்றும் மதிப்பிடும் உலகளாவிய அமைப்பான ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏசிஐ) வேர்ல்ட் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச (ஐஜிஐ) விமான நிலையம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. அதாவது, ஆண்டுதோறும் 59.5 மில்லியன் பயணிகள் வந்துசெல்வதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, பயணிகளின் போக்குவரத்தில் 60.2% அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டெல்லி விமான நிலையம் 2021 இல் 13 வது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் கொரோனா தொற்றுக்கு முன்பு 2019ம் ஆண்டில் 17 வது பரபரப்பான விமான நிலையமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து முதல் 10 பட்டியலில் இடம் பெற்ற ஒரே விமான நிலையம் டெல்லி விமானநிலையமாகும். மேலும், இந்த அறிக்கையின்படி, மொத்த பயணிகள் போக்குவரத்தில் முதல் 10 விமான நிலையங்கள், உலகளாவிய போக்குவரத்தில் 10%, 2021 இல் இருந்து 51.7% ஆதாயத்தைக் கண்டன. இருப்பினும், இந்த விமான நிலையங்களில் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்து 2019 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் 85% ஆக இருந்தது. கொரோனா தொற்றுக்கு பின் சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்குவதன் மூலம், 2022 உலகளாவிய பயணிகள் போக்குவரத்து 7 பில்லியனை எட்டியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் 93.6 மில்லியன் பயணிகளுடன் உலகின் பரபரப்பான விமான நிலையமாக, ஜார்ஜியாவின் ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் இருந்தது, இது 2021 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகவும் இருந்தது. டெல்லி விமான நிலையத்திற்கு அடுத்தப்படியாக பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையம் உலகின் 10வது பரபரப்பான விமான நிலையமாகும்.
ஏறக்குறைய 2,000 விமான நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தக சங்கமான ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல், 2022 ஆம் ஆண்டில் பயணிகளுக்கான உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசை பட்டியிலை நேற்று வெளியிட்டது. கடந்த 2022ம் ஆண்டில் கிட்டதட்ட 6 கோடி பயணிகளை கையாண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அதில், கடந்த ஆண்டு முதல் 10 விமான நிலையங்களில், ஐந்து அமெரிக்காவிலும், தலா ஒன்று வளைகுடா, இங்கிலாந்து, ஐரோப்பா, தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவிலும் இருந்தன. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஆசிய விமான நிலையமாக டெல்லி இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.