மாடலிங் துறையில் விருப்பம் உள்ள பெண்ணிடம் கவர்ச்சிகரமான புகைப்படத்தை பெற்றுக்கொண்டு ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், தனக்கு மாடலிங் துறையில் விருப்பம் அதிகமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகவும் அப்பொழுது தன்னுடைய தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அந்த குறுஞ்செய்தியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள ப்ராஜெக்ட்டுக்கு இந்திய அழகிகள் தேவை என தொலைபேசி எண்ணுடன் தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அந்த பெண் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

அப்பொழுது தங்களுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களை அனுப்புமாறு கேட்டுள்ளனர். இதனை நம்பிய அந்தப் பெண் தன்னுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட உள்ளதாகக் கூறி ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் ஆய்வாளர் திவ்யகுமாரி தலைமையிலான போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே இவர் சென்னை கொளத்தூர் பகுதியில் இதேபோன்று மாடலிங் பெண்ணை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தற்போது ரஞ்சித்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.