ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில், கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, விளையாடிய இந்திய அணி நேற்றைய 4ஆம் நாள் ஆட்டத்தின்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்களை குவித்தது.
91 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நேற்று தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்களை எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பவுலர் மேத்யூ குன்மன், டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். அணி 14 ரன் எடுத்திருந்தபோது குன்மன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த டிராவிஸ் – லபுஸ்சேன் இணை ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்தனர். 163 பந்துகளை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் போல்டானார். 213 பந்துகளை எதிர்கொண்ட லபுஸ்சேன் 63 ரன்கள் எடுத்தார். அவருடன் கேப்டன் ஸ்மித் 10 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 7 8.1 ஆவது ஓவரின் போது ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.