ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் சோஹம் தேசாய் ஆகியோரை நீக்கியுள்ளது.
2024-25ல் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா 1-3 (5 போட்டிகள்) என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்து சிலரை நீக்கியுள்ளது.
எட்டு மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அணியில் மசாஜ் செய்பவர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ராகுல் டிராவிட்டின் பதவிக்காலத்திற்குப் பிறகு இந்தியாவின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஐபிஎல் போட்டியில் பங்குபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து அபிஷேக் நாயர், ரியான் டென் டோஷேட் மற்றும் மோர்ன் மோர்கெல் உள்ளிட்டோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்தனர்.
நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா பேட்டிங்கில் திணறியது. பின்னடைவுகள் இருந்தபோதிலும், கம்பீரும் அவரது பயிற்சி குழுவும் இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல வழிநடத்தியது. இதனால் அந்த குழுவே அப்படியே தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிஷேக் நாயர், டி. திலீப், சோஹம் தேசாய் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.
ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது, இதற்கு முன்னதாக, புதிய பயிற்சியாளர்கள் அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்..!! தங்கம், வெண்கல பதக்கங்களை வாரி குவிக்கும் இந்தியா..!!