BANW vs INDW: டி20 தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வங்கதேச அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, முதல் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் டக்வொர்த் லீக் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்திலும், இதேபோல் மே 2ம் தேதி நடைபெற்ற 3வது போட்டியிலும், 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, தொடரையும் கைப்பற்றியது.
கடந்த 6ம் தேதி சில்ஹெட்டில் நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று (மே 9) 5வது டி20 போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீராங்கனைகள், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக இந்திய அணி தரப்பில் ஹேமலதா 37, ஸ்மிருதி மந்தனா 33, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 ரன்கள் எடுத்தனர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேச அணி வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் அந்த அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராதா யாதவ், 3 விக்கெட்டுகள், ஆஷா ஷோபனா 2, டிடாஸ் ஷாது ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி, வங்க தேச அணியை முழுமையாக ஒயிட்வாஷ் செய்துள்ளது.