1911 முதல் 1948 வரை 37 ஆண்டுகள் ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் மீர் உஸ்மான் அலி கான், சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் முதல் கோடீஸ்வரர் ஆவார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யார் என்று கேட்டால், டாடாக்கள், பிர்லாக்கள் போன்ற தொழிலதிபர்களின் பெயர்கள்தான் நமக்கு நினைவுக்கு வரும். உலகளவில் பெரிய பணக்காரர் யார், இந்தியளவில் பெரிய பணக்காரர் யார் என்பது குறித்து பலரும் தெரிந்து வைத்திருக்கிறோம். இப்போதுதான் மிகப்பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்களா என்று நினைத்தால் நிச்சயமாக இல்லை, காலனித்துவ ஆட்சியிலிருந்து நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட மன்னர்கள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருந்து வந்தனர். இவ்வாறு வசதிபடைத்த மன்னர்களில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் இருக்கிறார்.
அதுவும் ஒரு இந்தியர் அந்த காலத்திலேயே மிகப்பெரிய செல்வந்தர் பட்டியலை முதலிடம் வகிக்கிறார். ஏப்ரல் 1886 இல் பிறந்த மிர் உஸ்மான் அலி கான், ஹைதராபாத் சமஸ்தானத்தின் கடைசி நிஜாம் ஆவார், அந்த நேரத்தில் இது பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தியாவின் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. அவர் 1911 முதல் 1948 இல் இந்தியாவுடன் இணைக்கப்படும் வரை ராஜ்யத்தை ஆட்சி செய்தார். இவர் ஆகஸ்ட் 29, 1911-ல் அவரது தந்தைக்குப் பிறகு ஹைதராபாத் நிஜாமாக தனது 25 வயதில் பதவியேற்றார், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக தலைவராக இருந்தார். இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்று உருது, பாரசீகம், அரபி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேசுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
நவீன ஹைதராபாத்தின் கட்டிடக் கலைஞராக அறியப்பட்ட நிஜாம் இந்தியாவின் முதல் விமான நிலையத்தையும் விமான நிறுவனத்தையும் உருவாக்கினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஹைதராபாத் உட்பட பல பொது நிறுவனங்களை நிறுவியதற்காகவும் நிஜாம் புகழ் பெற்றார். 1937 இல் மிர் உஸ்மான் அலி கான் தனது உச்சக்கட்டத்தின் போது டைம் இதழின் அட்டைப்படத்திலும் இடம் பெற்றார். அறிக்கைகள் நம்பப்பட வேண்டுமானால், நிஜாம் மிகவும் பணக்காரராக இருந்ததால், அவர் 185 காரட் வைரமான ஜேக்கப் டயமண்டை பேப்பர் வெயிட்டாக வைத்திருந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் திருமணத்தின் போது, நிஜாம் அவருக்கு வைர நெக்லஸ் மற்றும் ப்ரூச்களை பரிசாக வழங்கினார், அவை ராணி இறக்கும் வரை அணிந்திருந்தன.
கடந்த ஆண்டின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, மீர் உஸ்மான் அலி கானின் பணத்தின் இன்றைய மதிப்பு ரூ. 17.47 லட்சம் கோடியாக ($230 பில்லியன் அல்லது ரூ. 1,74,79,55,15,00,000.00) இருக்கும். இது தற்போது உலகின் மிகப் பெரிய பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு $250 பில்லியனுக்கு அருகில் உள்ளது. நிஜாம் பேப்பர்வெயிட் வைப்பதற்கு பதிலாக வைரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது, இவர் அதிகம் ஆடம்பரமான பரிசுகளை விரும்புபவர். பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத்தின் திருமணத்திற்கு வைர நகைகளை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர் சொந்தமாக 1941-ல் ஹைதராபாத் ஸ்டேட் வங்கியை தொடங்கினார். அதுமட்டுமல்லாது உஸ்மானியா பல்கலைக்கழகம், உஸ்மானியா பொது மருத்துவமனை, பேகம்பேட் விமான நிலையம், ஹைதராபாத் உயர்நீதிமன்றம், உஸ்மான் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற இரண்டு நீர் தேக்கங்களும் இவரது ஆட்சியின் பொது கட்டப்பட்டதாகும்.
இவரை ஹைதராபாத்தின் ‘நவீன கட்டிட கலைஞர்’ என்று மக்கள் போற்றி புகழ்ந்தனர். நிஜாமின் 37 வருட ஆட்சிக்காலத்தில் தான் ஹைதராபாத்தில் மின்சாரம், ரயில் பாதைகள், சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் ஆகியவை கொண்டு வரப்பட்டது. கல்வியின் தேவையை கருத்தில் கொண்டு இவர் ஜாமியா நிஜாமியா, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் மற்றும் தாருல் உலூம் தியோபந்த் போன்ற சில முன்னணி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு நன்கொடை அளித்துள்ளார்.