இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து நதியில் சுமார் ரூ.80,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய தங்க இருப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இது குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வின் போது அங்கு தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான திட்டங்களை பாகிஸ்தான் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணப் பற்றாக்குறையை சந்தித்து வரும் அந்த நாட்டிற்கு இது பொருளாதார உயிர்நாடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் தேசிய பொறியியல் சேவைகள் பாகிஸ்தான் (NESPAK) மற்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம், பாகிஸ்தானின் சுரங்கத் துறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NESPAK இன் நிர்வாக இயக்குனர் சர்காம் எஷாக் கான் இதுகுறித்து பேசிய போது “அட்டோக் மாவட்டத்தில் சிந்து நதிக்கரையில் ஒன்பது (09) பிளேசர் தங்கத் தொகுதிகளுக்கான ஏல ஆவணங்களைத் தயாரிப்பதற்கான ஆலோசனை சேவைகள் மற்றும் பரிவர்த்தனை ஆலோசனை சேவைகளுக்கான” ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தினார். இது, அந்த பகுதியில் வணிக தங்கச் சுரங்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும்.
தங்க வைப்பு
சிந்து நதி இந்தியாவில் உள்ள இமயமலையில் இருந்து தங்க வைப்புகளை கொண்டு செல்வதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர், அவை பாகிஸ்தானில் பிளேசர் தங்கத்தின் வடிவத்தில் குவிகின்றன. நீரிலேயே நீண்டதூரம் கீழ்நோக்கி பயணிப்பதால் அவை தட்டையான அல்லது முழுமையாக வட்ட வடிவில் இருக்கின்றனர். வரலாற்று ரீதியாக இயற்கை வளங்களால் நிறைந்த சிந்து சமவெளிப் பகுதி, தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற உலோகங்களுடன் நீண்ட காலமாக தொடர்புடையது.
இந்த கண்டுபிடிப்பு பாகிஸ்தானின் சுரங்கத் திறனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அந்நாட்டின் தங்க இருப்பு தெற்காசியாவில் மிகக் குறைந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியின் தரவுகளின்படி, அந்நாட்டின் தங்க இருப்பு டிசம்பர் 2024 நிலவரப்படி $5.43 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத சுரங்கம் மற்றும் அரசாங்க கட்டுப்பாடுகள்
இந்த பிராந்தியத்தில் தங்க இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியானதால், ஏற்கனவே கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள நவ்ஷேராவிற்கு அருகிலுள்ள சிந்து நதி அடிவாரத்திற்கு உள்ளூர் சுரங்க ஒப்பந்தக்காரர்களின் அங்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு சட்டவிரோத சுரங்க பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், பஞ்சாப் மாகாண அரசாங்கம் தலையிட்டு அங்கீகரிக்கப்படாத சுரங்கப் பணிகளுக்கு அனுமதி மறுத்தது, இதனால் பிராந்தியத்தில் ஒழுங்குபடுத்தப்படாத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன.
பொருளாதார தாக்கம்
பாகிஸ்தானின் பொருளாதாரம் குறைந்து வரும் அந்நிய செலாவணி இருப்பு மற்றும் பலவீனமடையும் நாணயம் உள்ளிட்ட கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அட்டாக் பிளேசர் தங்கத் திட்டம் மிகவும் தேவையான நிதி நிவாரணத்தை வழங்க முடியும். சுரங்க வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதையும் வெளிநாட்டு தங்க இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இந்த திட்டம் பாகிஸ்தானின் உள்நாட்டு தங்க உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய சுரங்கத் துறையில் அதன் நிலையை வலுப்படுத்தவும் முடியும். இருப்பினும், இந்த முயற்சியின் வெற்றி திறமையான சுரங்க முறைகள், ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பெரிய அளவிலான சுரங்க நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க முதலீட்டாளர்களை ஈர்ப்பதைப் பொறுத்தது.
பாகிஸ்தான் தனது தங்கம் பிரித்தெடுக்கும் திட்டங்களை தொடங்கும் போது இந்த கண்டுபிடிப்பு உண்மையான பொருளாதார நன்மைககளை வழங்கி அந்நாட்டை பணக்கார நாடாக மாற்றுமா? அல்லது பயன்படுத்தப்படாத வாய்ப்பாக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.