ஐசிசி உலகக்கோப்பை 2023 இந்தியாவில் நேற்று முதல் தொடக்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி ஆணித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது நியூஸிலாந்து அணி. இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் பங்கேற்பது கேள்விக்குறி தான் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரும், இளம் நம்பிக்கை நட்சத்திரமுமான சுப்மான் கில், டெங்குவுக்கு சாதகமாக சோதனை செய்த பின்னர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த வலை பயிற்சியில் சுப்மான் கில் பங்கேற்கவில்லை. கில்லின் முன்னேற்றத்தை இந்திய அணி நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும், இன்று மற்றொரு சுற்று சோதனைக்குப் பிறகு அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பது குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் கில் விளையாட தவறினால், அவருக்கு பதில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் அல்லது கேஎல் ராகுல் ஆட்டத்தை துவங்குவர் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்தியாவின் பிரகாசமான இளம் பேட்டிங் திறமைகள் கொண்ட சுப்மான் கில் ஆடும் XI இல் இல்லாதது அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும், ஏனெனில் அவர் இந்த ஆண்டு பயங்கர பார்மில் இருந்துள்ளார்.
சுப்மான் கில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது ஒரு சிறிய சரிவைத் தவிர, அவர் நம்பமுடியாத நிலைத்தன்மையைக் காட்டினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் 890 ரன்களுடன் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் உள்ளார். ஆசிய கோப்பையில் 302 ரன்களுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். கடந்த சில இன்னிங்ஸ்களில் அவர் 104, 74, 27, 121, 19, 58 மற்றும் 67 ரன்கள் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பைக்கு முன்னதாக, இந்திய அணியில் பல முன்னணி நட்சத்திரங்கள் காயங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பினர். ஜஸ்பிரித் பும்ரா, கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளனர். ஆசிய கோப்பையின் போது கூட, சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.