Total Votes: மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த தகவல்களை ஏன் 48 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட முடியாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
2024 மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மீதமுள்ளன. இந்தநிலையில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் கால தாமதம் செய்தது. இதையடுத்து, தேர்தல் முடிந்த தினத்தன்று வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்துக்கும், சில தினங்களுக்கு பின் வெளியான இறுதி வாக்கு சதவீதத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்தநிலையில், பதிவான வாக்குகள் உட்பட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் உள்ள வாக்காளர்களின் இறுதி அங்கீகரிக்கப்பட்ட தரவுகளை வெளியிடக் கோரி ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தலில் பதிவான வாக்கு விபரங்களை 48 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் வெளியிடுவதில் என்ன சிரமம்?” என, தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியது.
அதற்கு அதிக நேரம் எடுக்கும். நிறைய தகவல்ளை சேகரிக்க வேண்டி உள்ளது,” என, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் சர்மா பதில் அளித்தார். ஆனால் ஒவ்வொரு வாக்குச்சாவடி அதிகாரியும், வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்கு விபரங்கள் அடங்கிய, 17 சி பிரதியை, மாலைக்குள் செயலியில் சமர்ப்பிக்கின்றனரே; தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாள் முடிவில் முழு தொகுதியின் தரவு இருக்குமில்லையா?” என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
”உடனடியாக கிடைக்காது,” என, அமித் சர்மா கூறியதும், ”சரி, அடுத்த நாள் வெளியிடலாமே?” என, நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஏ.டி.ஆர்., மனு மீது ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 24க்கு ஒத்திவைத்தனர்.
Readmore: அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை 50% அதிகரிக்க வேண்டும்…!