ராஜமுந்திரி சிறையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் அலட்சியம் காட்டப்படுவதாக சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
ஆந்திரா தெலங்கானா பிரிவுக்கு பிறகு கடந்த 2014 – 2019 ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. இவர் மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக ரூ.118 கோடி பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதனைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஜனசேனா, பாஜக கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடு வைக்கப்பட்டுள்ள ராஜமுந்திரி மத்திய சிறையில் டெங்கு பாதிப்பால் ஒரு கைதி உயிரிழந்துள்ளார். இந்த சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவையும் அதே கதிக்கு உள்ளாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று அவரது மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச்செயலருமான நாரா லோகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நாரா லோகேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ராஜமுந்திரி மத்திய சிறையில் வீர வெங்கட சத்யநாராயணா என்ற விசாரணைக் கைதி, டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார். இதே கதியை சந்திரபாபு நாயுடுவுக்கும் ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. எனது தந்தை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதேனும் நேர்ந்தால், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியே பொறுப்பு. சிறைப் பகுதி முழுவதும் கொசுக்கள் மொய்க்கின்றன. அதிகாரிகள் இப்பிரச்சனையை கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளர்.