அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை. கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்க இயலும். அந்த வகையில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக முதல்வரால் கொண்டு வரப்பட்டதே (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம்) புதுமைப்பெண் திட்டமாகும்.
இத்திட்டம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வியில் சேர்ந்த 2.73 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டம் மூலம் 6569 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். அதோடு இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலம் உயர் கல்விக்கு செல்லும் மாணவிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு வரை அரசு பள்ளிகளில் மட்டும் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். ஆனால் 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.