கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி என்னும் பகுதியில் வசித்து வருபவர் அஜின் சாம். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தமிழகத்தின் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் தொடர்ந்து பேசிவந்த நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை அஜின் சாம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதற்கு அந்த மாணவியும் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்வதாக அஜின் வாக்குறுதி அளித்துள்ளார். பின்னர் கடந்த 17ஆம் தேதி தான் நண்பர்களுடன் களியக்காவிளை வருவதாகவும், இருவரும் வெளியே செல்லலாம் என்றும் அஜின் அந்த மாணவியிடம் கூறியுள்ளார்.
அதன்படி, தனது பெண் தோழிகள் ஸ்ருதி, பூர்ணிமா உட்பட 5 பேருடன் களியக்காவிளை வந்த அஜின் சாம் தனது காதலியான அந்த மாணவியை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த பகுதியில் இருந்த ஒரு தனியார் விடுதியில் அனைவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு அஜின் சாம் மற்றும் அந்த மாணவி மட்டும் தனி அறையில் தங்கியுள்ளனர். அப்போது அஜின் சாம் அந்த மாணவியின் விருப்பம் இல்லாமல் அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் அடுத்த நாள் அந்த மாணவியை அவரின் வீட்டில் விட்டுள்ளனர்.
அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜின் சாம் மற்றும் அவரோடு வந்த 5 நண்பர்களை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இதற்கு முன்னர் இது போன்று சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. மேலும், சிலரிடம் பணம் பறித்த தகவலும் பெண்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பெண் தோழிகளை அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.