மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் அம்பாசாரி பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி, சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் பழகிய ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாய், அவரிடம் கேட்டதற்கு, தனக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதாகக் கூறி தான் கற்பமானதை மறைத்தார். இதையடுத்து, தான் கர்ப்பமான விஷயம் வெளியே தெரியாமல் இருக்க அவரது தாய் வெளியே சென்றதும், வீட்டில் வைத்தே யூடியூப் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் அவர் பெற்றெடுத்த பெண் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு உடலை தனது வீட்டில் ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த சிறுமியின் தாய் உடல்நிலை குறித்து விசாரிக்கையில், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாயிடம் கூறியுள்ளார்.
அதைத் தொடர்ந்து சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பிறகு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றும் கூறியுள்ளனர்.