மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த நட்பு, இளைஞர் ஒருவரை அரை நிர்வாணமாக முட்புதருக்குள் தவிக்கவிட்டு சென்றுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் பகுதியில் வசித்து வருபவர் காத்தவராயன். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது இருக்கையில் இவருக்கு செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்துள்ளனர். இதையடுத்து, காத்தவராயன் தனது ஊர் திருவிழாவிற்கு செந்தில் குமாரை அழைத்துள்ளார். அவரும் நிச்சயம் வருவதாக வாக்கு கொடுத்துள்ளார். திருவிழா நாளான நேற்று செந்தில் குமார் மதுரை வந்துள்ளார். கப்பலூர் சுங்கச்சாவடி வரை வந்த செந்தில் குமார் வழி தெரியவில்லையென்று கூறியுள்ளார்.

காத்தவராயனும் கூகுள் லொகேஷன் அனுப்பியுள்ளார். ஆனாலும், சரியான வழி தெரியவில்லை என்று கூறிய செந்தில் குமார், தன்னை நேரில் வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, அங்கு சென்ற காத்தவராயன், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கலக்கமடைந்த அவரது பெற்றோர், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். செல்போனும் நீண்ட நேரமாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. திருவிழா என்பதால் நண்பர்களுடன் சென்றிருப்பார் என அவர்களும் இதனை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நீண்ட நேரத்திற்கு பின்னர் காத்தவராயன் வேறு ஒரு உடையில் வீடு திரும்பியுள்ளார். என்ன நடந்தது என பெற்றோர் விசாரிக்கையில்தான் உண்மை தெரியவந்துள்ளது.

அதாவது காத்தவராயன் தனது இன்ஸ்டாகிராம் நட்பு செந்தில் குமாரை கப்பலூர் டோல்கேட்டிலிருந்து அழைக்க சென்றுள்ளார். அப்போது அவரை காரில் ஏற்றிய செந்தில் குமார், காரை ஊருக்கு ஒதுக்குப்புறமாக விட்டுள்ளார். அங்கு காத்தவராயனிடம் இருந்து செல்போன், நகை, பணம் உள்ளிட்டவற்றை செந்தில் குமாருடன் வந்தவர்கள் மிரட்டி பறித்துள்ளனர். பின்னர் காத்தவராயனின் ஆடைகளை உருவி அவரை நிர்வாணமாக போட்டோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தால் இந்த போட்டோவை இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவரை ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள முட்புதரில் விட்டுவிட்டு செந்தில்குமார் கும்பல் அங்கிருந்து பறந்துவிட்டது. பின்னர், அங்கிருந்து மீண்டு வந்த காத்தவராயன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.