கடந்த சில ஆண்டுகளாகவே மொபைல் ஆப் மூலம் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பணம் பிடுங்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்தும், அதிகபடியானவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆன்லைன் முதலீடு மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் மகாலட்சுமி என்ற கல்லூரி மாணவி திடீரென தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழுகிணறு பகுதியை சேர்ந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 30,000 இழந்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மகாலட்சுமி வீட்டில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் மாணவியை ஏமாற்றியது மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. தீவிர விசாரணையில் அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்தி மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.