காதில் ஏற்படும் வலி, அடைப்பு, குடைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நமது சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து உடனடியாக தீர்வு காணலாம்.
வாய்ப்புண், நாக்கு புண், பற்சொத்தை, பல் வலி போன்ற காரணங்களால் காது வலி வரக்கூடும். அது மட்டும் அல்லாமல் வேறு சில காரணங்களாலும் காது வலி, காது அடைப்பு, குடைச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும், நோய் தொற்றுகள், டான்சில் என்னும் சதை வளர்ச்சி, சைனஸ் போன்றவற்றாலும் பிரச்சனைகள் காதில் ஏற்படுவதற்கு பெரும்பாலான வாய்ப்புகள் உண்டாகிறது. கழுத்தில் இருக்கும் எலும்பு தேய்மானம் அடைந்தாலும் காதிற்கு தொந்தரவுகள் ஏற்படும். எத்தகைய காது பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஆற்றல் நம் சமையலறை பொருட்களிலேயே உள்ளது. அவை என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது போன்ற அரிய ஆரோக்கிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
கிராமப்புறங்களில், பொதுவாக காதில் வலி இருந்தால் தேங்காய் எண்ணெயை ஊற்றுவார்கள். தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக வீட்டில் இருக்கும் ரெண்டு நாட்டு பூண்டை இடித்து சாறு எடுத்து இரண்டு சொட்டு அளவிற்கு காதுக்கு உள்ளே போகும்படி விட்டுப் பாருங்கள், அரை மணி நேரத்தில் அசைக்காமல் அப்படியே வைத்திருந்தால் காது வலி மெல்ல மெல்ல குறை ஆரம்பித்து விடும். ஒரு பெரிய பூண்டு பல் ஒன்றை எடுத்து அதை காதில் பஞ்சு வைப்பது போல வைத்துக் கொண்டால், காதில் இரைச்சல் அல்லது அடைப்பு இருந்தால், சரியாக காது கேட்காதது போல தோன்றினால் தீர்வு கிடைக்கும்.
சைனஸ் தொந்தரவால் காது வலி இருந்தால் ரெண்டு ஸ்பூன் அளவுக்கு நல்லெண்ணையை காய்ச்சிக் கொள்ளுங்கள். அதனுடன் ரெண்டு கிராம்பு மற்றும் ரெண்டு இடித்த பூண்டு பல் சேர்த்து கரு நிறம் ஆகும் வரை கொதிக்க விடுங்கள். பின்னர் அடுப்பை அனைத்து நன்கு குளிர்ச்சியாக ஆறவிட்டு விடுங்கள். பிறகு அதிலிருந்து சில துளிகள் காதுக்குள் விட்டால் சைனஸால் ஏற்படக்கூடிய காது வலி படிப்படியாக நிவாரணம் காணும்
காதில் சீழ் பிடித்து காது வலி ஏற்பட்டால் திருநீற்றுப் பச்சிலையை தண்ணீர் விடாமல் அரைத்து அதில் இருந்து சில சொட்டுக்கள் சாறு எடுத்து காதில் விட்டால் உடனடியாக குணமடையும், சீழ் வெளியேறிவிடும். சிறு குழந்தைகளாக இருந்தால் நேரடியாக இப்படி காதில் விடாமல், நான்கைந்து கல் உப்பை லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் திருநீற்றுப் பச்சிலையை சேர்த்து விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை காதை சுற்றிலும் இளஞ்சூட்டில் பற்று போல போட்டு விட்டால் உள்ளே இருக்கும் சீழ் காய்ந்து வெளியேறிவிடும்.