ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் திமுக இன்று முறையிட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இதனால், ஆளுநருக்கு எதிராக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.

இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-விடம் இன்று முறையிட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. அப்போது, ஆளுநரை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோர் டெல்லி விரைகின்றனர். இருப்பினும், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான நேரம் உறுதியாகவில்லை.