ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ள நிலையில், கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 75 ஆயிரம் அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும், குளிக்கவும் இரண்டாவது நாளாக தடை விதித்துள்ளது.

பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்துச் செல்லவும், மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நிறுவனத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.