தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், கடும் மழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இடுக்கி மற்றும் கண்ணூரில் நாளை ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், மேலும் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான சூறாவளி காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கேரளக் கடற்கரையில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் மழை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கேரள கடற்கரையை ஒட்டி, மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், மேலும் 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையில் சாலையின் மீது மரங்கள் விழுந்ததால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.