நாட்டில் ஜேஎன்.1 என்ற உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தற்போது மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே நேரம் தற்போதைய சூழலில் புதிய கொரோனாவால் தமிழ்நாட்டிற்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என கூறப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் நபர்கள் விரைவிலேயே குணமாகி விடுவதால், மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனவும் முதியவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சென்னையைச் சேர்ந்த ஒருவர் தற்போது பலியாகியுள்ளார். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த 42 வயதான அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.