கேரளாவில் 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், 3 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டையம், பத்தணம்திட்டா ஆகிய 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று முதல் நான்கு நாட்கள் கேரளா முழுவதும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.