தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த ஒருசில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், ”தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. எனவே, இரண்டு நாட்களுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும். தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும்.
அதேபோல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை” என்று தெரிவித்தார்.