ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன் ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிக்க போவதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன் மற்றும் வாகனம், தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கிறது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் வாங்கும் போது இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டும். ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு, சுழற்சி விகிதத்தில் கடன் வாங்கியிருந்தால், மாத தவணை கட்டணம் இனி உயரும் அல்லது தவணை வருடங்கள் அதிகரிக்கும். கடந்த மே மாதம், 4% இருந்த ரெப்போ வட்டி விகிதம் 4.40 % உயர்ந்துள்ளது. அதன் பிறகு ஜூன் மாதம் ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 % உயர்ந்தது. தற்போது 4.9 % இருந்து 5.4 % சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தது குறித்து சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியது, ரெப்போ வட்டி விகிதத்தில் 50 புள்ளிகள் உயர்த்தி 5.40 % உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் நுகர்வோர் விலை, பண வீக்கம் அதிகமாக இருக்கிறது. பண வீக்கம் 6% மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச நாணய நிதியம், பொருளாதார வளர்ச்சியின், கீழ்நோக்கிய கணிப்பை மாற்றியுள்ளது. மேலும் மந்த நிலை அபாயத்தை தெரியப்படுத்தி உள்ளது. இந்திய பொருளாதாரம், உயர் பண வீக்கத்தில் சிக்கி தவித்து வருகிறது. மேலும் பல நாடுகளில் அன்னிய செலாவணி குறைந்து இருக்கிறது. பண வீக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பும் உயர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா வலுவான நிலையில் உள்ளது. போதிய அளவு அன்னிய செலாவணி, இருப்பு உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிராக சரிந்தாலும் பிற நாடுகளின் கரன்சிகளுக்கு எதிராக உயர்ந்து உள்ளது.
மேலும் மற்ற நாடுகளில் உள்ள பண வீக்கம் இந்தியாவில் இல்லை. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அன்னிய நேரடி முதலீடு 13.6 பில்லியன் டாலராக அதிகப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் இதே கால கட்டத்தில் 11.6 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உலகளவில் நான்காவது பெரிய அளவில் இருக்கிறது. உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. கிராமப்புற தேவைகள் கவலையான போக்கை காட்டுகிறது. அரசியல் அபாயங்கள் போன்ற உலகளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் இந்திய பொருளாதாரம் சரிவை சந்திக்கிறது. வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் ஏப்ரல், மே மாதங்களில் ரூ.6.7 லட்சம் கோடியில் இருந்து ரூ.3.8 லட்சம் கோடியாக குறைந்து இருக்கிறது. ஆகஸ்டு 4-ஆம் தேதி (நேற்று) வரை ரூபாய் மதிப்பு 4.7 % சரிந்து இருக்கிறது. இதை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் பண வீக்கத்தை விட அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பதே இந்திய ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம். நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி தனது பொருளாதார வளர்ச்சியை 7.2 % தக்க வைத்துள்ளது. சமையல் எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.