International Mother Language Day!: உலகளவில் ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. பல நாடுகளில் ஒரே மொழியை பேசும் மக்கள் உள்ளன. இந்தியா போன்ற பல நாடுகளில் பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மொழி பேசும் மக்களுக்கு அவர்கள் மொழி தாய்மொழிதான். அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், பன்மொழிப் பயன்பாட்டை முன்னேற்றுவதற்காகவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய்மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகின்றது.
உலக தாய்மொழி தினம் (International Mother Language Day) ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் மற்றும் பன்மொழிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. உலக தாய்மொழி தினத்தின் வரலாறு? ஏன் கொண்டாடப்படுகிறத? அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம்.
சர்வதேச தாய்மொழி தினம் 1999 நவம்பர் 17 அன்று ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மொழி இயக்கத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் தொடங்கப்பட்டது.
1952 இல் இதே நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக சர்ச்சையால் உயிர்நீத்தவர்களுக்கு இத்தினத்தில் அஞ்சலி செலுத்துவார்கள்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஆஷ்ஃபீல்ட் பூங்காவில் சர்வதேச தாய்மொழி தின நினைவுச்சின்னம் ஒன்று, அன்று உயிரிழந்த நான்கு இளம் மாணவர்களுக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் அனுசரிக்கப்படும்போது, மக்கள் அவ்விடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். மொழி பன்முகத்தன்மையின் சீரழிந்த நிலைக்கு எதிரான போராட்டத்தில் இளம் உயிர்கள் செய்த தியாகத்தை நினைவூட்டுவதாகும்.
சர்வதேச தாய்மொழி தினத்தில் உலகம் முழுவதும் உள்ள அவர்களின் மொழி பெருமைகளை கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்நாள் பங்களாதேஷில் ஒரு பொது விடுமுறை தினமாகும். இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள கலாச்சார மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான நிகழ்வுகளில் யுனெஸ்கோ மற்றும் பிற ஐ.நா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் பேசப்படும் 6000 மொழிகளில் குறைந்தபட்சம் 43 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன. மேலும் மொழியின் முக்கியத்துவம் மற்றும் அது வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த நாள் கடைபிடிக்கிறது.