மணிப்பூரில் ஜூன் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கம் தொடரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனால் மணிப்பூா் முழுவதும் ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மைதேயி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் இம்பால் கிழக்கு மாவட்டம் மற்றும் பழங்குடியினரை அதிகம் கொண்ட காங்போபி மாவட்டத்தின் எல்லையில் உள்ள காமன்லோக் பகுதியில், குகி பழங்குடியினா் வாழும் கிராமத்தின் மீது ஆயுதம் தாங்கிய கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 9 பேர் பலியாகினர். மேலும், 10 படுகாயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி முதல் இணையச் சேவைகள் தடை தடை செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடா்ந்து, 11 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு தளா்வு நேரம் குறைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தொடா்ந்து நிகழும் வன்முறைகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, மணிப்பூரில் கடந்த ஜூன் 20ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிப்பு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மணிப்பூர் பழங்குடியின தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், இணைய சேவை முடக்கம் இன்னும் தளர்த்தப்படவில்லை. இது தொடர்பாக மணிப்பூர் மாநில உள்துறை ஆணையர் ரஞ்சித் சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வருகிற ஜூன் 30ஆம் தேதி மாலை 3 மணி வரை இணைய சேவை முடக்கம் தொடரும். மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் அமைதி நிலைநாட்ட இந்த முடிவை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.