கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குழந்தையின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை சமத்துவப்புரத்தைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் பிரபுஷா(23). இவருக்கும் சீனு என்ற இளைஞருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் சீனுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரை விட்டு பிரிந்த பிரபுஷா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்த போது பிரபுஷாவுக்கு, முகமது சதாம் உசேன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பிரபுஷா மயிலாடி என்ற பகுதியில் அந்த இளைஞருடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களுக்கு பிரபுஷாவின் 1 வயது ஆண் குழந்தை தொந்தரவாக இருந்திருக்கிறது. இதனால் அந்த குழந்தைக்கு மது ஊற்றி கொடுத்தும் குழந்தையை அடித்து உதைத்து துன்புறுத்தியும் வந்திருக்கின்றனர்.
இதில் குழந்தையின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையின் காயத்தை பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்களின் தகவலைத் தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் சென்ற காவல்துறையினர் பிரபுஷா மற்றும் முகமது சதாம் உசேனை விசாரித்ததில் குழந்தையை துன்புறுத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.