தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியானது. குறைந்தபட்சமாக 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தொடங்கியுள்ளது. எழுத்து மற்றும் வாசித்தல் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி தொடங்கிய இந்த நேர்காணல் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல், லஞ்சம், மோசடிகள் போன்றவற்றை ஏற்கக் கூடாது என்பதற்காகவே நேர்காணல் தேர்வுக்கான உயர் அளவு மதிப்பெண் வெறும் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாலுகா அளவில், தாசில்தார், சிறப்பு தாசில்தார், ஏதேனும் இணை தாசில்தார் என 3 அதிகாரிகளின் முன்னிலையில் இந்த நேர்காணல் தேர்வு நடைபெறும். மூன்று பேரும், தனித்தனியாக மதிப்பெண் வழங்கி, அந்த மூன்றின் சராசரி மதிப்பெண்கள் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும்.
தெரிந்துக் கொள்ள வேண்டியவை: அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்ட நாளில், நேர்காணல் தேர்வுக்கு செல்ல வேண்டும். பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Marksheet), கல்வி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விண்ணப்பத்தில் உள்ளது போன்று 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.