நடப்பு கல்வியாண்டு முதல் நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பை மீண்டும் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திறந்தவெளி மற்றும் தொலைத்தூரக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப்படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில்நுட்ப அறிவையும், அனுபவங்களையும் வளர்த்துக்கொள்ளும் வகையில் பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர பட்டயப்படிப்புகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு வருகின்றன.

10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற மக்களுக்கான சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடங்குகிறது. தொலைதூரக் கல்வியை விரும்பும் நகர்புற வாசிகள் மற்றும் நகரங்களின் வரையறுக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நிலம், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, பொது இடங்கள், சுகாதாரம், காற்று மற்றும் நீர் தரம் போன்றவற்றை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளுக்காக இந்தப் பாடங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதில், அலங்காரத் தோட்டம் அமைத்தல், நாற்றங்கால் பராமரிப்புத் தொழில்நுட்பங்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் அமைத்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் இந்தாண்டு துவங்கப்பட உள்ளன.

மேலும், 44 வகையான ஆறுமாத கால சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவற்றில் தென்னை சாகுபடி, காளான் வளாப்பு, மூலிகைப் பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்களுக்கான நாற்றங்கால் தொழில்நுட்பங்கள், நவீன கரும்பு சாகுபடி, திடக்கழிவு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்கள், அங்கக வேளாண்மை, பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், ரொட்டி மற்றும் சாக்லேட் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பாடங்கள் பயில்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் இயக்ககம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்தது. எனவே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களை நிறுவ ஆர்வமுள்ளவர்கள் இந்த இயக்கத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.