fbpx

விடாது பெய்த மழை!… வரலாற்றில் முதல்முறையாக ரிசர்வ் டே சென்ற ஐபிஎல் 2023 பைனல்!

இடைவிடாது பெய்த மழை காரணமாக ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கடந்த 2 மாதங்களாக பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்த ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய முன்னாள் சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மே 28ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக மோதின. அதில் வரலாற்றில் 10வது முறையாக விளையாடும் சென்னைக்கு 5வது கோப்பையை வென்று கொடுத்து வெற்றியுடன் கேப்டன் தோனி விடை பெறுவாரா என்று எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

மறுபுறம் சுப்மன் கில் போன்ற தரமான நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களால் சொல்லி அடிக்கும் குஜராத் தங்களது கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் இருக்கிறது. அப்படி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்தப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு துவங்குவதற்கு முன்பாகவே ஜோராக வந்த மழை முதல் ஆளாக களத்தில் விளையாடியது. அதனால் டாஸ் வீசுவதற்கு தாமதமான நிலையில் நேரம் செல்ல செல்ல அதிகமாக பெய்த மழை ஒரு கட்டத்தில் ஆலங்கட்டி மழையாக மாறி இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது.

இருப்பினும் ஃபைனல் என்பதால் 9 மணி வரை ஓவர்கள் குறைக்காமல் போட்டி நடத்துவதற்கு நடுவர்கள் திட்டமிட்ட போதிலும் தொடர்ந்து மழை பெய்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதனால் காத்திருந்து காத்திருந்து பார்த்து நடுவர்கள் இரவு 11 மணி வரை எதிர்பார்த்தும் மழை விடாததால் ஃபைனல் ரத்து செய்யப்பட்டு ரிசர்வ் நாளுக்கு மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இப்படி ஃபைனல் மழையால் பாதிக்கப்பட்டு ரிசர்வ் நாளுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அகமதாபாத் மைதானத்தில் இவ்விரு அணிகள் மோதும் ஃபைனல் நடைபெற உள்ளது. அதில் இரவு 7:00 மணிக்கு டாஸ் வீசப்பட்டு இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்க உள்ளது. இருப்பினும் மழை மனது வைத்து வழிவிட்டால் மட்டுமே அப்போதும் போட்டி நடைபெறும். இல்லையேல் இதே போலவே தாமதம் அதிகரிக்க அதிகரிக்க ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவு காண்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். அதன் உச்சகட்டமாக இரவு 12.05 மணிக்கு குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் கொண்ட போட்டியில் நடத்தி வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு அம்பயர்கள் முயற்சிப்பார்கள்.

ஒருவேளை தொடர் மழையால் அதுவும் சாத்தியம் இல்லாமல் போனால் குறைந்தபட்சம் தலா 1 ஓவர் அதாவது சூப்பர் ஓவரை நடத்தி அதில் வெற்றியாளரை தீர்மானிப்பதற்கு நடுவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் அதையும் நடத்துவதற்கு மழை விடாமல் போகும் பட்சத்தில் இந்த வருடம் 70 போட்டியில் கொண்ட லீக் சுற்றில் முடிவில் முதலிடம் பிடித்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும். அந்த வகையில் 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து சாதனை படைக்கும்.

Kokila

Next Post

ஐபிஎல் 2023 பைனல்!... மழையால் இன்றும் நின்றுபோனால் என்னவாகும்?... விதிமுறை கூறுவது என்ன?

Mon May 29 , 2023
மழைக்காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2023 பைனல், இன்றும் மழையால் நின்றுபோனால், முடிவு என்னவாக இருக்கும் என ஐபிஎல் விதிமுறைகள் என்ன சொல்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். ரசிகர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த குஜராத் – சென்னை இடையேயான ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி கனமழை காரணமாக இன்று மீண்டும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தநிலையில், இன்றும் மழை குறுக்கிட்டால் முடிவு என்னவாக இருக்கும் என ஐபிஎல் விதிமுறைகள் கூறுவது […]

You May Like