ஐபிஎல் தொடரின் CSK vs KKR lலீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
16-வது ஐபிஎல் தொடரில் நேற்றி இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.30 மணி அளவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதன்படி, முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. அதில், அதிகபட்சமாக சிவம் துபே 48* ரன்களும், கான்வே 30 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 20 ரன்களும் குவித்தனர். கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்நிலையில், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற குறுகிய இலக்கில் கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர்.
இதில் குர்பாஸ் சாஹர் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய வெங்கடேச ஐயரும் சாஹர் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து, நிதிஷ் ராணா மற்றும் ரிங்கு சிங் ஜோடி பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றிக்காக ரன்களை குவித்தனர். இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு அரைசதம் அடித்து விளாசிய நிலையில், சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ரிங்கு சிங் 54 ரன்கள் எடுத்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இறுதியில், ராணா மற்றும் ரஸல் களத்தில் நிற்க, 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 57* ரன்களும், ரிங்கு சிங் 54 ரன்களும் குவித்துள்ளனர். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.