ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த 1ஆம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட 7 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கோபத்தில் உள்ளது. இந்த தாக்குதலை அடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவியது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தம் நாட்டு மக்களுக்கு விடுத்தன. இந்நிலையில், நேற்று அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ஈரான் ஏவியது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால், இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த வாரம் இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் முன்னேற்றங்களை முதலீட்டாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், சந்தையில் இதன் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல போர் பதற்றம் காரணமாக எண்ணெய் சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
Read More : செம குட் நியூஸ்..!! லைசென்ஸ் வாங்க இனி எங்கும் அலைய தேவையில்லை..!! வீட்டிற்கே வந்துவிடும்..!!