திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் 21ம்தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆர்ஜித சேவாக்கள் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்களுக்கான டிக்கெட்டுக்கள் முன்கூட்டியே ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. குறிப்பாக சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவாக்களுக்கான டிக்கெட்டுகள் பெற தேவஸ்தான வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளவேண்டும். அதில் பதிவு செய்தவர்கள் குலுக்கலில் தேர்வு செய்து தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள்.அதன்படி வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ஆகிய டிக்கெட்டுகளுக்கு வரும் 19ம்தேதி முதல் 21ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். பதிவு செய்தவர்களுக்கான குலுக்கல் வரும் 21ம் தேதி பகல் 12 மணிக்கு நடக்கும். அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணம் செலுத்தி அதன்பின்னர் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான வருடாந்திர பவித்ர உற்சவம், செப்டம்பர் மாதத்திற்கான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டு ஆகியவை வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பெறலாம். இந்த சேவா டிக்கெட் பெற்ற பக்தர்கள் அதில் பங்கேற்க முடியாதபட்சத்தில் ரூ.300 கட்டண தரிசன வரிசையில் பங்கேற்க அனுமதிப்படுவார்கள். செப்டம்பர் மாத அங்க பிரதட்சண டிக்கெட் இம்மாதம் 23ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. இத்தகவலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ரூ.4.07 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 70,896 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 37,546 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.07 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியதால் பக்தர்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிருஷ்ணதேஜா தங்கும் விடுதி வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.