ஆதாரில் மோசடிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) நினைவுபடுத்தி உள்ளது.
இந்திய மக்களின் அடையாளத்திற்கான உலக அளவில் ஏற்று கொள்ளப்பட்ட சான்றாக ஆதார் அட்டை விளங்குகிறது. மத்திய அரசு நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், பல்வேறு நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை எந்தத்தடையும் இன்றி அங்கீகரித்து, அனைத்து சேவைகளையும் வழங்க ஆதார் வழிவகுக்கிறது.

இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என யுஐடிஏஐ உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் பெற்று 10 ஆண்டு நிறைவடைந்திருந்தால், வீட்டு முகவரி, ரேஷன் கார்டு போன்ற துணை ஆதாரங்கள் மூலம் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் இதுவரை 135 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு செல்வதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்து கொள்ளலாம்.
- முதலில் அதிகாரப்பூர்வ தளமான uidai.gov.in-க்கு செல்ல வேண்டும்.
- இப்போது ‘எனது ஆதார்’ என்கிற ஆப்ஷனின் கீழ், ‘அப்டேட் டெமாக்ரபிக்ஸ் டேட்டா அண்ட் செக் ஸ்டேட்டஸ்’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பிறகு https://myaadhaar.uidai.gov.in/ என்கிற பக்கத்திற்கு செல்வீர்கள். இதில் நீங்கள் லாக் இன் செய்ய வேண்டும்.
- அதில் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ஓடிபி செயல்முறையை தேர்வு செய்ததும் உங்கள் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
- இப்போது ‘அப்டேட் ஆதார் ஆன்லைன்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதில் உள்ள வழிமுறைகளைப் படித்து, ‘ப்ரொசீட் டூ ஆதார் அப்டேட்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் அப்டேட் செய்ய விரும்பும் டேட்டாவை தேர்ந்தெடுக்கவும், ஆதார் அட்டையில் அப்டேட் செய்ய வேண்டிய முகவரிக்கான ஆதாரத்தையும் நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
- பின்னர் விவரங்களை சரிபார்த்து கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.
- இந்த ஆதாரை அப்டேட் செய்யும் செயல்முறைக்கு நீங்கள் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.