தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸாகிறது. ஃபேன் பாய் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ள நிலையில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
த்ரிஷா – அஜித் இருவரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். இப்படத்தில் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் எப்போதுமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அவர் ஒருபோதும் அரசியலுக்கு மட்டும் வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான், மதுரை மாவட்டத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திடீங்க. இனி தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போறீங்க என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய்நகர்த்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மற்றும் திமுக முயற்சி செய்வதாக ஏற்கனவே ஒரு கருத்து அடிபட்டு வருகிறது. இந்த சூழலில் தான், அஜித் – அண்ணாமலையின் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.