காயங்களால் அவதிப்படும் இந்திய வீரர்கள் என்ற பட்டியல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வரிசையில் ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் என்ற சொல்லிக்கொண்டே போகலாம். இந்திய அணியின் முக்கியவீரர்களாக பார்க்கப்படும் இவர்கள் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருந்துவருகிறது. அடுத்தடுத்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை தொடர் என முக்கியமான தொடர்கள் வரவிருக்கும் நிலையில், முக்கியமான வீரர்கள் அணிக்குள் இருக்க வேண்டியது கட்டாயமாக இருந்துவருகிறது.
உலகக்கோப்பை தொடரில் பங்குபெற்று விளையாட வேண்டும் என்றால் அவர்கள் குறைந்தது 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பாகவே இந்திய அணியில் விளையாட வேண்டியது கட்டாயம். இல்லையேல் அவர்கள் அணியில் இருந்தும் பிரயோஜனம் இல்லாத நிலையே இருந்துவரும். இந்நிலையில் ஆசியக்கோப்பை தொடரில் ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அணிக்குள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ரா ஆசியக்கோப்பைக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பெறுவார் என்ற தகவல் கசிந்துள்ளது.
டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் அவரது காயம் மோசமாக மாறியதால், அவர் ஆசிய கோப்பையை மட்டுமின்றி டி20 உலகக்கோப்பையும் தவறவிட்டார். முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தில் அவதியுற்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2023 ஐபிஎல் தொடருக்கே பும்ரா திரும்பிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியே இருந்தார். ஐபிஎல்லை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் அவர் பங்கேற்க முடியாத நிலையே இருந்துவந்தது. இதனால் எப்போது தான் பும்ரா அணிக்குள் திரும்புவார் என்ற எதிர்ப்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே அதிகமாகவே இருந்துவருகிறது.இந்நிலையில் ஆசியக்கோப்பைக்கு முன்னதாக அயர்லாந்து தொடரிலேயே பும்ரா இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது